Wednesday 20 August 2014

உப்புத் தண்ணி.





இளைக்கவும் பின்னவும் தெரியாத கைகளுக்கு மத்தியில்
காவோலைகளைத் தொங்கவிட்டபடி பனைகள்.

நடந்து போகும் மனிதனின் சுவடுகளுக்காய் ஏங்கும்
இன்னமும் அகலப்படாத
ஒற்றையடிப் பாதைகள்.

நடந்து பார்க்கவும் போதாத தூரத்தைக்கடக்க
மனிதரின் காலடியில் சுற்றும்
அதிகப்படியான சக்கரங்கள்.

எப்போதும்
என் மனதோடு அலைமோதும் மேற்குக்கடற்கரை.

 
தன் நிழலை கடலுக்குள் நீந்தவிட்டு
விளக்கு இல்லாமல் நிமிர்ந்து நிற்கும்
வெளிச்சக்கூட்டின் அடிமடியில் கேட்கும்
காலனித்துவ  அடையாளத்தின் அழுகுரல் அறியாமலும்
அதன் உயரத்திற்குள் அடங்கிக்கிடக்கும்
உயிர்களையும் உழைப்பையும் நினையாமலும்
பூரித்த
பளைய நினைவுகளில் குத்திய 
பக்கத்துக் காரமுள்ளு.

உயிர் ஊற்றி ஊறவைத்துப்
பூத்திருந்த சில கட்டுமரங்களையும்
தொலைத்துவிட்டு
அழுது இரையும் கடற்கரைகள்.

வேரின் அளவினதாய் விழுதுகள் கொண்ட முப்பாட்டனுக்கும் மூத்து வளர்ந்திருந்த அந்த ஆலமரமில்லாத
பிள்ளையார் கோவிலடிச் சந்தி.
 
வயல் வெளியில்
வெய்யில் காலத்தில்
காகம் அலம்பிய
வேலங்குளத்துத் தண்ணியாய்
நினைவுகள்.

என்
எல்லா நினைவுகளையும் நசித்துக் கடந்தன
பொருக்குக் கிணற்றுக்குள்
உப்புத்தண்ணியை  இறைத்துவிட்டு
நம் பேரப்பிள்ளைகளுக்கான
ஈரத்தையே உறிஞ்சி விடும்
தண்ணி லாரிகள்.                                                  
                                                                  ---சிவம்.   Aug 04.2014.

2 comments:

  1. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_18.html?showComment=1411012022369#c8444431922796668986

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மதிப்புடன் ரூபன் அவர்கட்கு!
      தங்களின்அன்பான விசாரிப்புகளுக்கும் கவிதை பற்றிய கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கழுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிவம்.

      Delete